December 23, 2014

Numero Uno Vicky!

                                           

முழுமுதற் கடவுள். முப்பது முக்கோடி தேவர்களுக்கெல்லாம் முதல்வன். எல்லா பூஜைகளிலும் கணேஷ பூஜையே முதலில் செய்யப்படும். முதலில் வணங்கப்படும் தெய்வம். சிவனை வணங்குபவனும் தன் ஆசி பெற்ற பின்னரே சிவனின் ஆசி பெற முடியும், அந்த நாராயணனை வணங்குபவனும் தன்னை காணாமல் கோவிலை விட்டு  செல்ல முடியாது.  இந்த அளவிற்கு உயர்ந்த ஸ்தானத்தை அடைய,மக்களின் செல்லக் கடவுளாய், எந்நேரத்திலும் அனைவராலும் வணங்கப்பட ,"நியூமெரோ ஊனோ" கடவுளாய் இருக்க நம்ம விநாயகர் என்ன பண்ணார்?? உண்மைய சொல்லனும்னா, எப்படி தன் சமயோசித அறிவால் முருகனை வின் பண்ணி மாம்பழம் வாங்கினாரோ, அதே மாதிரி தான் இந்த "நியூமெரோ ஊனோ" டைட்டிலும் வாங்கினாரு. என்ன ஒரு வித்தியாசம்,இந்த டைம் அவங்க அம்மா கொஞ்சம் ஹெல்ப் பண்ணாங்க. (நல்ல குடும்பம்!!)

ஒரு நாள்,இந்திரசபைல நம்ம நாரதர்,"பிரம்மா,சிவன்,நாராயணன்- இவங்க மூனு பேர்ல யாரு பெரியவர்?"னு வழக்கம் போல தன் வேலைய ஆரம்பிச்சார். நாரதர் பிளான் புரிஞ்ச சிவன் சுதாரிச்சு,"நாரதா! உன் வேலைய எங்ககிட்டயே ஆரம்பிக்காத. எங்களுக்குள்ள தேவியர் மாதிரி சண்டையெல்லாம் வராது. எங்கள எங்க வேலைய பார்க்க விடுப்பா!"னு சொல்லிட்டு கைலாசம் கிளம்பி போய்ட்டார்.
 

ஆரம்பமே இப்டி ஆகிடுச்சே,நம்ம எதிர் பார்த்த மாதிரி பெருசா எதும் நடக்காதோனு நாரதர் நொந்து போக, அவர் மனச குளிரூட்டும் விதமா, இந்திரன்,"நாரதர் கேட்டது சரி. எனக்கும் அந்த டவுட் இருக்கு. யார மக்கள் முதல்ல
  வணங்கனும்? யார் அந்த மரியாதைக்கு பொருத்தமானவர்?"னு கேட்டார். இந்திரனின் வார்த்தைகளை கேட்ட நாராயணன் சிரிச்சுட்டே,"என்னப்பா நாரதா,நீ  நினைச்சது நடக்குது போல! சந்தோஷமா?" ன்னு நாரதர கேட்டுட்டு,"சரி, தேவர்களின் தலைவன் இந்திரனுக்கே டவுட் வந்துடுச்சு. அப்போ கண்டிப்பா அதுக்கு ஒரு ரிசல்ட் தெரிஞ்சாகணும். எந்த கடவுள்?? ஹ்ம்ம்ம்ம்,மக்களுக்காக எப்பவும் இருக்கணும். எப்போ கூப்பிட்டாலும் போகணும். எங்க இருந்தாலும். எங்கள விட மக்கள் கூட  அவர் தான் முதல்ல கூட இருக்கணும்.  எங்கள பார்க்க வரவங்க கூட அவர பார்த்துட்டு தான் வரணும். அப்படி ஒரு பெருமை. யாருக்கு குடுக்கலாம்? எங்க மூணு பேருக்கு வேண்டா. உங்கள்ள யாருக்காச்சு தரலாம். யாரு அதுக்கு பொருதமானவங்க?? யாரனு எப்படி கண்டு பிடிக்க?? ரொம்ப கஷ்டமாச்சே!"னு நாரதர் போட்ட விதைக்கு தண்ணி ஊத்தி உரமும் போட்டார் லீலைகளின் மன்னன் ,நாராயணன்!

"என்ட்ட ஒரு ஐடியா
  இருக்கு. எல்லாருக்கும் ஒரு போட்டி வைக்கலாம். யாரு பூமிய மூணு வாட்டி சுத்திட்டு முதல்ல வராங்களோ அவங்களுக்கே அந்த பெருமை போய் சேரும். சம்மதமா?"னு பிரம்மா தன்னோட நாலு மூளையை கசக்கி ஐடியா கொடுத்தார். ஐடியா நல்லா இருக்கேனு பெருமாலும் தேவியர்களும் கிரீன் சிக்னல் காட்ட,எல்லாரும் போட்டிக்கு ரெடியானாங்க.

இப்பவாச்சும்
  ஜெயிக்கலாமே  அப்டின்னு முருகனும் மயிலேறி கிளம்ப, இருக்கறது பத்தாதுன்னு பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசப்பட்டு இந்திரனும் குபேரனும் கூட கிளம்பிப் போக, நம்ம விநாயகர் மட்டும் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி கொழுக்கட்டைய முழுங்கிட்டு இருந்தார்.

இதப்பார்த்த நாரதர் ஒன்னும் புரியாம,"விநாயரப்பா! என்ன இது? உங்களுக்கு பட்டமும் பெருமையும் வாங்க
 ஆசை இல்லையா? இல்ல,போன வாட்டி பண்ண மாதிரி ஏதும் ஐடியா இருக்கா? இந்த டைம் அப்டி பண்ண முடியாது. அப்பா கைலாசம் போய்ட்டாரு. அம்மா மட்டும் தான் இங்க இருக்காங்க. சோ,நீங்க கண்டிப்பா உலகத்த சுத்தியே ஆகணும்."ன்னு சொன்னார். நம்ம விநாயகரோ அதி மேதாவி. புத்திசாலி. இருக்ற இடத்துல இருந்தே பட்டமும் பெருமையும் வாங்க திட்டம் போட்டார். (அது சரி, மாம்பழமே வாங்கியாச்சு. இதலாம் ஒரு பெரிய மேட்டரா!!)

ஒரு பெரிய
 கொழுக்கட்டைய முழுங்கிட்டு,"அது இல்ல நாரத முனிவரே! எல்லாரையும் பாருங்க. எப்டி ஒல்லியா இருக்காங்க. நான் எப்டி இருக்கேன்னு பாருங்க. நல்லா பெருசா தொப்பைய வச்சுகிட்டு! அது  போதாதுனு முருகனோட வாகனம் மயில்,இந்திரனோட வாகனம் யானை, சந்திரனுக்கு மான்,சூரியனுக்கு குதிரை,  யமனுக்கு எருமை. எனக்கு !!! என்னோட வாகனம் ஒரு சின்ன எலி. அந்த குட்டி எலி நல்லா பெரிய தொப்பையோட இருக்ற என்னைய சுமந்துட்டு எப்படி இந்த உலகத்த சுத்திட்டு முதல்ல வரும்? அதுவும் மூணு வாட்டி! நா ஒரு சுத்து சுத்துரதுக்குள்ள எல்லாரும் நூறு சுத்தே சுத்திடலாம் போங்க. ஏற்கனவே சும்மா வெறும் கொழுக்கட்டையா சாப்டிட்டு ஒன்னும் பண்றது இல்லன்னு சொல்றாங்க. இதுல தோத்துப்போனா அவ்வளோதான்! மானமே போய்டும். எதுக்கு இந்த இன்சல்ட்ன்னு தான் நான் போகல",னு அப்பாவியா சொன்னாரு.

எல்லாரும் விநாயகரப்
  பார்த்து பரிதாபப்பட, தன்னையே கொக்கி போட வைச்ச விநாயகரா அப்பாவின்னு சிரிச்சுட்டே பெருமாள் பார்வதியம்மாவ பார்த்தார். பார்வதியம்மா யாரு! லீலைகளின் மன்னன் பெருமாளுக்கு தங்கச்சி. அந்த பெருமாளையே கொக்கி போட வச்ச பிள்ளையாருக்கு அம்மா!அவங்களுக்கா புரியாது? இருந்த இடத்துல இருந்தே எல்லாத்தையும் பண்றதுல அப்டியே மாமா மாதிரின்னு நினைச்சு சிரிச்ச பார்வதியம்மா,அவங்க செல்லப்பிள்ளை  ஜெயிக்க வழி யோசிச்சாங்க. 

தரைல "ராமா "னு சம்ஸ்கிருதத்தில் எழுதி பிள்ளையார மூணு வாட்டி சுத்தி வர சொன்னாங்க.
 இவரும் அம்மா சொல்றாங்களேனு மூணு வாட்டி சுத்திட்டு பிரம்மா முன்னாடி போய் நிக்க,"இதுக்கு நீயும்,உங்க அம்மாவும் மாமாவும் தான் பொறுப்பு. முருகன் திரும்ப கோவிச்சுட்டு மலையேறாம பார்த்துக்கோங்க. பிள்ளையார் தான் போட்டில ஜெயிச்சார்!"ன்னு பிரம்மா சொல்லி டிக்ளேர் பண்ணிட்டார்.

எல்லாரும் உலகத்த மூணு சுத்து சுத்திட்டு சோர்ந்து போய் வர, நாரதர்,"போட்டி எப்பவோ முடிஞ்சுடுச்சு. விநாயகப்பெருமான் தான்
 ஜெயிச்சார்!"னு சொன்னதும் எல்லாருக்கும் ஆச்சரியம். ஆனா முருகனுக்கோ கடுப்பு. "நாரத முனிவரே! என் அண்ணன் இருந்த இடத்தை விட்டு நகர்ந்த மாதிரி கூட தெரியவில்லை. இன்னும் கொழுக்கட்டையோட தான் இருக்கார். போன  மாதிரி  எதும் பண்ணிருக்க சான்ஸ் இல்ல..ஏன்னா அப்பாவும் இங்க இல்ல. அப்புறம் எப்டி??"னு கேட்ட முருகனுக்கும் மற்றவர்களுக்கும் நாரதர் நடந்ததை சொன்னார்.

நாரதர் சொன்னத கேட்ட எல்லாரும் புரிந்தும் புரியாமலும் நிற்க, முருகன் மட்டும் கொஞ்சமும் குறையாத கோவத்தோட,"ஓ! இந்த டைம் அம்மாவும் மாமாவும் அண்ணன் பக்கம்மா! அது எப்டிம்மா "ராமா"ங்கற சொல்லும் உலகமும் ஒண்ணாகும்??"னு பார்வதியம்மாவ பார்த்து கேட்டார்.

மகனின் கோவம் புரிந்த பார்வதியம்மாவும், "முருகா! கோவப்படாம
 கொஞ்சம் பொறுமையா கேளு. உன் கோவம் நியாயமானது தான். ஆனா உண்மைய புரிஞ்சுக்கோ. என் அண்ணனோட நேம்ங்கறதால சொல்லல. எத்தனையோ அவதாரம் எடுத்த உங்க மாமா,மனிதனா அவதரிக்கும் போது "ராமா"னு  நேம் வச்சது ஒரு காரணமா தான். சம்ஸ்கிருதத்தில் "ராமா" என்ற சொல்,"ரா","மா" என்னும் இரு அக்க்ஷரங்களை கொண்டது. அக்க்ஷரம் என்றால் விதை. "ரா" என்பது "அக்னி பீஜை". அதாவது மனிதனின் ஆன்மாவிற்கும்,மனதிற்கும்,உடலிற்கும் சக்தி தரும் விதை. மனிதனுள் இருக்கும் நெருப்பு. மனிதன் சந்தோஷமாய் வாழ  இந்த மூன்றின் சக்தி ரொம்ப முக்கியம். ஆன்மா பிறவிப்பயன் பெற, மனசு தர்மத்தின் வழி போகணும். மனசு நல்லா இருந்தா உடம்புக்கு எந்த குறையும் வராது. "மா" என்பது "அமிர்த பீஜை".  அள்ள அள்ள குறையாதது அமிர்தம். பூலோகத்தின் அமிர்தம் ஆன்மா. ஒன்றும் இல்லாத உடலுக்குள் உயிரோட்டமாய் இருப்பது. புத்துயிர் கொடுக்கும் விதை. மனிதனின் தர்மகாரியங்கள் ஆன்மாவிற்கு சக்தி தரும். அழியும் உடலை விட்டு ஆன்மா வேறு உடல் எடுக்கும் பொழுது அந்த உயிர்க்கு சக்தியாய் இருப்பது போன பிறவியில் அந்த ஆன்மா செய்த தர்மங்கள். எல்லா மனிதனும் இந்த உண்மையை உணர்ந்து,தர்மம் பண்ணா உலக ஆன்மா மிகவும் சக்தியுடன் இருக்கும். தர்மம் நிலைத்து நிற்கும் அந்த உலகம் இறைவனுக்கு சமமானதாகும்!. அதை உணர்த்தவே "ராமா" என்னும் பெயர் கொண்டு உங்க மாமா மனிதனாய் அவதரித்தார். ஆக, "ராமா"  என்னும் சொல் "பூப்பிரதிக்க்ஷனம்"ங்கற (பூப்பிரதிக்க்ஷனம்-உலகத்த மூணு வாட்டி சுத்தி வரது.) சொல்ல விட உயர்ந்தது." என்றார்.

"சரி,அப்டின்னா அப்புறம் அப்பாவுக்கும் பிரம்மாவுக்கும் என்ன மரியாதை?"னு முருகன் புரியாமல் அவங்க அம்மாட்ட கேட்க, பார்வதிம்மா சிரிச்சுட்டே,"முருகா,மக்கள் கடவுள் கிட்ட வர்றது அவங்களுக்கு கிடச்ச நல்ல பிறப்புக்கு நன்றி சொல்லவோ,எப்போ வரும்னு
 தெரியாத இறப்பில் மோக்க்ஷம் வேண்டியோ இல்ல. அது ஒரு சிலர் தான் இருக்காங்க. ஆசையை துறக்காத,போதும் என்ற எண்ணம் இல்லாதவர்கள்,எண்ணியது நடக்காமல் வருந்துபவர்கள்  கடவுளை நாடுவது கஷ்ட காலத்தில் மட்டுமே. வாழ்கையின் உண்மையான அர்த்தம் புரியாத அவர்களின்  ஆன்மா மீண்டும் பிறப்பெடுக்கும். அந்த ஆன்மாவின் பிறப்பை கணிப்பது பிரம்மா. மீண்டும் பிறப்பெடுக்காமல் இருக்க அந்த ஆன்மாவிற்கு முக்தி தருவது உன் அப்பா. ஆனா முக்தி வேண்டும்னா  ஆன்மா தர்ம வழில போகணும். மக்கள்,லெளதிக வாழ்கையிலிருந்து வெளி வர மறந்து வாழ்றாங்க. அப்டி ஒரு வாழ்வில், பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் இருக்கும் காலத்தை தர்ம வழியில் வாழ்வது எப்டின்னு சொல்ல தான் உன் மாமா ராமாவதாரம் எடுத்தார்."

பார்வதியம்மா சொல்றத கேட்ட எல்லாரும் அவங்க சொல்றது சரின்னு ஒத்துகிட்டாங்க. ஆக,விநாயகர் வெற்றிய எல்லாரும் அக்செப்ட் பண்ண,பிரம்மா,"இனி எல்லா பூஜைகளும் கணேஷ பூஜை கொண்டே ஆரம்பிக்கப்படும்" அப்படின்னு சொல்லி,விநாயகர்க்கு "விக்னகர்தா"னு  பட்டமும் கொடுத்தார்.

செல்ல பிள்ளை விநாயகரும்,மக்களின் பரபரப்பான வாழ்க்கைய தெரிஞ்சு,மக்களோட வசதிக்காக கோவில் இல்லனாலும் பரவாயில்லைன்னு கொட்ற மழையும் சுட்டெரிக்ற  வெயிலும் பார்க்காம கொளு கொளுன்னு மரத்தடில உட்கார்ந்திருக்கார்! மக்களுக்காக!! 
ஆனா,கொழுக்கட்டையோட தான் !!! 


P:S: "ராமா" என்ற பெயருக்கான மற்றொரு காரணம் -"ஓம் நமோ நாராயனாய" என்பதில் இருந்து "ரா" என்ற வார்த்தையை எடுத்துவிட்டால், "நா யனாய" என்று வரும். "நா " என்றால்,சம்ஸ்கிருதத்தில்  "இல்லை"  என்று அர்த்தம். ஆக, "நா யனாய" என்றால்,நாராயணன் இல்லை என்று அர்த்தம். அதே போல், "ஓம் நம சிவாய" என்பதில்,"ம" என்ற வார்த்தையை எடுத்து விட்டால், "ஓம் ந சிவாய" என்றாகி,"சிவன் இல்லை" என்று பொருள் தரும். சிவனும் நாராயணனும் இணைந்ததே உலகம், அவர்கள் இல்லை என்றால் மனிதனும் இல்லை,இவ்வுலகமும் இல்லை என்பதை உணர்த்தவே "ராமா" என்னும் நாமம் கொண்டு அவதரித்தார் நாராயணன். உண்மையில்,"ராம நாமம் ஒரு வேதமே!"


No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...