January 11, 2015

உத்தரகோச மங்கை!


           திருஉத்தரகோச மங்கை. “மண் முந்தையதோ, மங்கை முந்தையதோ”, என்ற பழமொழி கொண்டு புகழப்படும் ஸ்தலம். மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் 38 இடங்களில் புகழ்ந்து சொல்லப்பட்ட தலம். பாண்டிய நாட்டின் பழம்பெரும் ஸ்தலங்களில் ஒன்றாகும். யுகங்கள் கடந்த நம் புராணங்களின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பழமையையும் பெருமையையும் ஒருசேர உலகிற்கு எடுத்துக்கூறும் சைவஸ்தலம்.

இறைவன் - மங்களநாதர் 
இறைவி - மங்களாம்பிகை
நடராஜர் - ஆதிசிதம்பரேசர் (மரகத நடராஜர்)

     சிவபெருமான் உண்பதும் உறங்குவதும் உத்தரகோச மங்கை தலத்தில்தான் என்பார்கள்.
 "பக்தரெல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோச மங்கையூர்!" என்ற வரிகளின் வாயிலாக மாணிக்கவாசகர் இதை உலகிற்கு உரைத்துள்ளார். மேலும், மாணிக்கவாசகர் அவர்களுக்கு சிவபெருமான் இங்கு தான் காட்சி தந்தார். அதை பறைசாற்றவே,மாணிக்கவாசகரும்,"சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது இனியே" என்று சிவபெருமானிடமே பக்தியுடன் வினவினார்!
              உத்தரம் - உபதேசம். கோசம் - ரகசியம். மங்கை  - பார்வதி தேவி. எம்பெருமானாகிய சிவபெருமான், பார்வதி தேவி அவர்களுக்கு வேதாகமங்களின் இரகசியங்களை இங்கு தான் உபதேசித்தார். யுகங்கள் கடந்து வாழும் வரலாற்றையும் பல புராணங்களையும் இத்தலம் கொண்டுள்ளது.  இராவணன் மனைவி மண்டோதரியின் சிவபக்தியின் புகழ் பாடும் ஸ்தலம். இத்தலத்து இறைவன், இராவணன் மனைவி மண்டோதரிக்குக் காட்சி கொடுத்துள்ளார். இராவணன் மண்டோதரியின் திருமணம் நடந்த இடம். இத்தலத்தின் வரலாற்றுப்  புராணத்திலும், மதில் சுவற்றில் உள்ள கல்வெட்டுகளிலும் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் பழமையை புலப்படுத்துகிறது. மேலும் மூவாயிரம் வருடங்களை கடந்து வாழும் இலந்தை மரம்,இத்திருக்கோவிலின் ஸ்தல வ்ருக்ஷம். இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. அக்னியின் மத்தியில் நடராஜப்பெருமான் ஆடுவதாகக் கூறுவர். பார்வதி தாயார் காண,இங்கு ஆடிய நடனத்தை தான் தில்லை அம்பலத்தில் எம்பெருமான்  ஆடியதாகக் கூறுவர்.  ரத்தினசபாபதி, ஆதி சிதம்பரேசன் என்றழைக்கப்படும்  இந்த மரகத நடராஜர் வருடம் முழுவதும் சந்தனக் காப்புக்குள் மறைந்திருப்பார். மரகதத்திருமேனி கொண்ட நடராஜரை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளது. ஆக,அவரை வெளிக்கொணரவும் இயலாது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத திருவாதிரையன்று சந்தனப்படி கலைந்து விசேஷ அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினத்தில் மட்டும் நடராஜரை மரகத மேனியாக காணலாம். காப்பு அகற்றிய தினம் அதிகாலை மீண்டும் சந்தனம் வைத்து அருணோதய காலத்தில் தரிசனம் நடைபெறும். அதுவே ஆருத்ரா தரிசனம். மேலும், சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. ஆனால், இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களநாதராகிய சிவபெருமானுக்கு இக்கோவிலில் தாழம் பூ சார்த்தப்படும்.

                                                                   ***************************************
                        ஒரு சமயம்,உலகத்தைப் படைத்த பிரம்மாவுக்கு சொல்லில் அடங்கா கோபம் உண்டாயிற்று. அக்கோபம்,அவரையும் அறியாமல் உண்டானதால் அவர் அதை அழிக்க முயன்று தோற்றுப்போனார்.  அவரை ஆட்டுவித்த அக்கோபம் உலகத்து உயிர்களையும் வதைத்தது. தவம் ஒன்றே இதற்கு விடை என்று உணர்ந்த பிரம்மா, கடுந்தவம் புரிய உலகிற்கு வந்து இடம் தேடினார். எங்கும் அமைதி இல்லை. உலகம் முழுவதும் சுற்றிய அவர் தக்க இடம் கிடைக்காமல் சோர்ந்து இருந்த நேரம்,உத்தர கோச மங்கை பற்றி அவர் மனதில் எண்ணினார். எம்பெருமானாகிய சிவபெருமானே உறங்கும் இடமல்லவா! தவத்தில் சிறந்தவன் சிவபெருமான்! அவரே நிம்மதியாக உறங்கும் இடம் என்றால்  அதை விட தக்க இடம் வேறு எங்கு உள்ளது?! உடனே உத்தர கோச மங்கை வந்தடைந்தார். அக்னி தீர்த்தக் கரையில் சிவனை வேண்டி தியானத்தில் அமர்ந்தார் . சிவனும் அருள் புரிய,பிரம்மாவுக்கு விமோசனம் கிடைத்தது.  இக்காரணத்தால்இத்தலம் பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

                                                     ****************************************

           முன்னொரு காலத்தில்,த்ரேதா யுகத்தில்,இராம அவதாரத்திற்கும் முன்னால், இத்தலத்தில் சிவபெருமான் பூலோகத்தில் வசித்துஆயிரம் முனிவர்களுக்கு சிவாகமம் பற்றி உபதேசித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள்,முக்தி வேண்டி தவமிருந்த அம்முனிவர்களிடம், சிவபெருமான்,"முனிவர்களே,என்னை என்  பக்தை மண்டோதரி அழைக்கின்றாள். நான் இலங்கை சென்றுவிட்டு வருகிறேன்."என்றவர், ஒரு முனிவரை நோக்கி, "நான் வரும் வரை சிவாகம நூலை பத்திரமாக வைத்திருங்கள்." என்று கூறிவிட்டு இலங்கை விரைந்தார்.

              மண்டோதரியின் முன்  சிவபெருமான் தன்னை ஒரு குழந்தைப் போல் பாவித்தார். மண்டோதரி சிவபெருமானின் அழகில் லயித்து நிற்க, அங்கு வந்த இராவணன்,"யார் குழந்தை இது? மிகவும் அழகான வசீகரிக்கும் முகம்."என்று கூறியவாறு அக்குழந்தையை தன் கைகளில் ஏந்தினார் . இராவணன் சிவபெருமானை ஏந்திய நேரம், உத்தர கோச மங்கையில், ஒரு பெரும் ஜோதி எழுந்தது. ஜோதி என்றால் சுட்டெரிக்கும் அனல் போல் அல்ல. சூரியனைப் போல் பிரகாசமாக, சந்திரனைப் போல் குளிர்ச்சியாக, உலகிலுள்ள அனைத்து பூக்களையும் தேன் மழையில் நீராட வைத்ததுப் போல் வாசமாக, ஸ்ரீமன் நாராயணன் உறங்கும் ஆதிசேஷனைப் போல் மிருதுவாகமூவுலகத்தின் இருளையும் போக்கும் ஒளிவெள்ளம் மிகுந்து அதி அற்புதமான ஜோதியாக இருந்தது. அத்தகைய ஜோதியால் ஈர்க்கப்படாதார் தான் உண்டோ?? வசீகரிக்கும் அத்தகைய ஜோதி,நிச்சயம் எம்பெருமான் ஒருவராய் தான் இருக்க முடியும் என்று எண்ணி அதனால் ஈர்க்கப்பட்ட முனிவர்கள் அந்த ஜோதியில் கலந்து முக்தியடைந்தனர். அனால், இறுதியாக ஒரு முனிவர் மட்டும் ஜோதியில் ஐக்கியம் ஆகாமல் அமர்ந்திருந்தார். சிவாகம நூலினை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் முனிவர் அவரே!
         தன் வாழ் நாள் முழுதும் வேண்டி நின்ற முக்தி அவர் கண் எதிரில் இருந்தும் அவர் அதை ஏற்கவில்லை. பின் எதற்கு இந்த கடுந்தவம்?முற்றும் துறந்து பித்தனாய் சுற்றியது இதற்குத்தானே! முக்தி ஆன்மாவின் சங்கீதம். ஆனால், சிவாகம நூலை பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்திருப்பது சிவபெருமான் அல்லவா! சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த சிவாகம ரகசியத்தைக் கூறும் பொழுது, அதைக் கேட்க ஆசைப்பட்ட முருகப்பெருமான் தேவியின் கூந்தலில் உள்ள மலரினுள் சென்று தேனீப் போல் ஒழிந்து கொண்டார். அதை அறிந்து கோபமுற்ற சிவபெருமான் இருவருக்கும் சாபமிட்டார். அத்தகைய பெருமை வாய்ந்த சிவாகம நூலை,ஒரு முனிவரை நம்பி விட்டுச்சென்றார் என்றால், அது முனிவரின் இப்பிறவிப்பலன் மட்டுமல்ல அவரது ஆன்மாவின் ஜென்ம பலன் அல்லவா! 
          ஆண்டுகள் கழிந்தன. மண்டோதரியின் அன்பிலும் பக்தியிலும் தன்னை மறந்த சிவபெருமான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்துவிட்டு உத்தர கோச மங்கை வந்தார். முனிவர் ஒருவர் மட்டும் சிவாகம நூலுடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். நடந்தவை அனைத்தையும் அறிந்த சிவபெருமான் அம்முனிவரை அன்புடன் தழுவி,"எம் வாக்கினை காப்பாற்ற சுயநலமற்ற உனது இச்செயலால் அகமகிழ்ந்தோம். உமது அடுத்தப் பிறவியில் பாண்டிநாட்டில் மாணிக்கவாசகர் என்னும் நாமம் கொண்டு அவதரித்து, எம்புகழ் பாடி தமிழை வளர்ப்பாயாக!" என்று வரமளித்தார். மேலும் ஜோதியில் கலந்து முக்தி பெற்ற 999 முனிவர்களையும் லிங்கமாய் உருமாற்றி,தானும் சஹஸ்ரலிங்கமாய் தன் பக்தர்களுடன் உத்தர கோச மங்கையில் ஒரு சேர கலந்துகொண்டார்.
          ஜோதி உருவான இடமே இக்கோவிலின் "அக்னித்தீர்த்தம்". ஸ்தலவ்ருக்க்ஷமான இலந்தை மரத்தின் அடியில் அந்த சஹஸ்ரலிங்கம் உள்ளது. இந்த இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்தவாறு தான் சிவபெருமான் முனிவர்களுக்கு சிவாகமம் பற்றி உபதேசித்தார். சிறந்த சிவபக்தராய் அவதரித்த மாணிக்கவாசகர், பார் வியக்கும் திருவாசகம், திருவெம்பாவை,திருக்கோவையார், திருப்பள்ளி எழுச்சி அருளியவர்.        

1 comment:

  1. அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...