மாயை. மூவுலகிலும் எளிதில் புரியாதது ஒன்று உண்டென்றால் அது
மாயை மட்டுமே. மாயை, எளிதில் உணரும் உண்மை இல்லை. உலக வாழ்க்கை மாயை. இவ்வுலகம்
மாயை. மனிதனின் சந்தோஷம், துக்கம், ஆசை, விருப்பு, வெறுப்பு, பற்று, சொந்தம், உறவு அனைத்தும் மாயை. இதை உணர்ந்தவன் கடவுளை அறிந்தவன்
ஆவான்.
மனிதர்களுக்கு
மட்டுமல்ல,முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் கூட மாயை பற்றிய சந்தேகங்கள் இருந்த
காலம் அது. நாரதர் புது முனிவராய் பதவியேற்ற சமயம். நாரதருக்கும் மாயை பற்றி
சந்தேகம் எழுந்தது - "உலக இன்பத்தில் மனிதன் மூழ்கியுள்ளான் என்றால் என்ன அர்த்தம்?
இன்பத்தில் திளைப்பது குற்றமா?
மாயை பற்றிய சித்தாந்தம் ஏன் மனிதனுக்கு எளிதில் எட்டாக்கனி
என்கின்றனர்? மனித வாழ்வு எளிதல்லவா! மாயை என்று என்ன உள்ளது?" முனிவர்களுக்கு சந்தேகம் என்றால் குரு ஸ்தானத்தில் இருந்து அவர்களின்
சந்தேகங்களை தீர்க்க வேண்டியது கடவுளின் கடமை. அப்பாவி நாரதர்,
ஸ்ரீமன் நாராயணனிடம் போய் தான் தன் சந்தேகங்களுக்கு
விளக்கம் கேட்க வேண்டுமா!
"பிரபோ! மாயை என்பதன் அர்த்தம் யாது?", என்றார் நாரதர், நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் தன் வாழ்க்கை ஒரே ஒரு கேள்வியினால் மாறப்போவதை அறியாமல்! "இந்த உலகம், உலக வாழ்க்கை, உலக வாழ்க்கையின் ஆதாரம் என மனிதன் எண்ணும் சந்தோஷம், பணம், சொந்தம், ஆசை அனைத்துமே மாயை நாரதா! வாழ்க்கை நிரந்தரம் என எண்ணும் எண்ணமும், உலகம் தன் கையில் உள்ளது என்ற எண்ணமும் மாயை. இதை உணர்ந்தவன் என்னை அறிந்தவன் ஆவான்.", என்ற நாராயணன் ஒன்றும் புரியாமல் நின்றிருந்த நாரதரை உற்று நோக்கிவிட்டு,"உனக்கு இன்னும் விளக்க வேண்டும் போல் தெரிகின்றதே! சரி,அந்த ஆற்றில் இருந்து நான் பருக நீர் கொண்டு வாரும். உமக்கு மாயை பற்றி விளக்குகிறேன்." என்றார்.
காரணம் இல்லாமலா ஸ்ரீமன் நாராயணன் நாரதரை அனுப்பி வைத்திருப்பார்? நாரதர் ஆற்றில் நீர் எடுத்துவிட்டு திரும்பிக்
கொண்டிருந்தார். இதமான மாலை நேரம்.
எந்நேரமும் இனிதே ஆனந்தமாய் பாடிக்கொண்டிருக்கும் நீரலைகள் பகலவனின் துணை கொண்டு
தங்கநிற ஆடையில் பிரகாசத்துடன் ஆடிக்கொண்டு செல்ல, கிளிகளும் குயில்களும்,காக்கைகளும் தங்களின் நாள் இனிதே முடிவடைந்ததை எண்ணி
ஆனந்தமாய் பாடிப் பறந்து செல்ல, ஆற்றுப்படுகையில் பூத்திருக்கும் மரங்களுக்கு வலிக்காமல்
இருக்க இதமாய் வருடியவாறு சென்ற காற்று நாரதரையும் சீண்டி விட்டுச் செல்ல,
பூலோக இயற்கையின் அழகில் மெய்மறந்து கானம் பாடிக்கொண்டு
ஆற்றங்கரையில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார் நாரதர். பச்சைநிறப் புல்வெளி,
தங்கநிற நீரலைகள், பூக்களின் மணத்தை திருடிக் கொண்டு செல்லும் காற்று என பூலோக
அழகில் தன்னை மெதுவாய் தொலைத்துக் கொண்டிருந்த நாரதர் தன் கண் எதிரில் தோன்றிய
காட்சியில் முழுதாய் தொலைந்தார்.
தன் காதலைக் கண்ட அழகிய ஆற்றங்கரையிலேயே ஒரு குடில் அமைத்து அதில் இன்பமாய் வாழ்ந்தார். நாட்கள் வாரங்கள் ஆகின. வாரங்கள் மாதங்கள் ஆகின. மாதங்கள் வருடங்களும் ஆகின. நாரதரின் வாழ்வில் இன்பமும் காதலும் கூடிக்கொண்டே சென்றன. அவர்களுக்கு அழகிலும் அறிவிலும் சிறந்த மகன்களும் மகள்களும் பிறந்தனர். நாரதர் பரமாத்மாவின் குவளை நீரைப் பற்றி முற்றிலும் மறந்து விட்டார். வருடங்கள் பல கடந்து சென்றன. நாரதருக்கு பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டன. மனிதனின் வாழ்வில் அனைத்து தருணத்திலும் காதலும் இன்பமும் நிறைந்து இருக்குமாயின் அவ்வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு அழகாய் இருக்குமோ அப்படியொரு வாழ்வை நாரதர் வாழ்ந்து கொண்டிருந்தார். காதல் இன்பத்தில் மூழ்கி இருந்த நாரதரின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.
இடி மின்னலுடன் ஈரேழு நாட்களாய் அடை மழை. விடாது
பெய்யும் மழையின் விளைவாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க நாரதரின் குடிலும்
ஆற்றின் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது. வருணதேவனுடன் வாயுதேவனும் கைகோர்க்க,
வெள்ளத்தின் மிகுதியாலும் காற்றின் பலத்தாலும் நாரதரின்
குடில் முழுதும் இருந்த இடம் தெரியாமல் நீரோடு நீராய் கரைந்து சென்றன. ஆற்று
வெள்ளத்தில் தன் காதல் மனைவி, தன் பிள்ளைகள், தன் பேரப்பிள்ளைகள் என தன் வாழ்வாதாரம் அனைத்தையும்
இழந்தார். ஆற்று வெள்ளத்தில் மூழ்க இருந்த நாரதர், "யாராவது காப்பாற்றுங்கள்!",
என்று கதறியபடி தத்தளித்துக் கொண்டிருக்க,
ஸ்ரீமன் நாராயணன் உடனே தன் இருகரம் நீட்டி நாரதரை மீட்டார்.
உயிர் பிழைத்த நாரதர் வெள்ளத்துடன் போரிட்டதில் சோர்ந்தும்
மனப் போராட்டத்தில் இருந்து மீளாமல், பேச வார்த்தையின்றி, சொந்தங்களை இழந்ததில் சோகத்துடன், உயிர் வாழ விருப்பமுமின்றி
அமர்ந்திருக்க, அமைதியினைக் கலைத்தார் புருஷோத்தமன். "நாரதா! எங்கே என் குவளை நீர்?"
"பார்வையில் வெறுமையை நிரப்பி இருந்த நாரதரின் விழிகள் இப்பொழுது புருஷோத்தமனை
கோபத்துடன் நோக்கின. "எங்கே என் குவளை நீரா??!?? புத்தி பேதளித்துப் போய் விட்டதா உமக்கு???
நான் இருக்கும் நிலை அறிவாயா நீ??என் மனநிலை அறிவாயா நீ??? நான் அனைத்தும் இழந்து நிற்கின்றேன்!! என் காதல் மனைவியை
இழந்து பிணமாய் நிற்கிறேன்! என் பிள்ளைகளை,பேரப்பிள்ளைகளை இழந்து வாழ்வற்று நிற்கிறேன்! நீ உருவாக்கிய
வெள்ளத்தில் முற்றும் இழந்து உன் முன் வெறுமையாய் நிற்கின்றேன். என்னைப் பார்த்து,
இந்நேரத்தில், எங்கே என் குவளை நீர் என்கிறாயே!!! இரக்கம் இல்லாதவனே!!!
உன் மனதில் என் நிலைக்காக சிறிதும் அனுதாபம் இல்லையா??
அவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவனா நீ?? அது சரி,உன் மனைவியையோ பிள்ளைகளையோ இழந்திருந்தால் தானே என் நிலை புரியும் உனக்கு! உன் குடும்பத்தை மட்டும் பத்திரமாக பார்த்துக் கொள்பவன் அல்லவா நீ! மற்றவர் பற்றிய கவலை உனக்கில்லை. எதற்க்கெடுத்தாலும் காலத்தின் மீதோ விதியின் மீதோ பழியை போட்டுவிட்டு நீ நிம்மதியாய் இருந்துவிடுவாய்!"
- நாரதர் தன் கோவக்கனைகளை
ஆத்திரமும், அழுகையும் கலந்து நாராயணன் மீது தொடுக்க, அவரை அமைதியாய் நோக்கின நாராயணனின் அலர்க் கண்கள்.
"அமைதி கொள் நாரதா! சற்றே சிந்தித்துப் பார்.
எங்கிருந்து உன் குடும்பம் வந்தது? எங்கிருந்து உன் வாழ்கையும், உன் சொந்தங்களும் வந்தன? நன்றாக சிந்தித்துப் பார். அவை அனைத்துமே என்னிடம் இருந்து
வந்தவை. நான் மட்டுமே உண்மை. இந்த மாயை நிறைந்த மூவுலகிலும் நான் மட்டுமே நிரந்தரம். உன்னிடம் இருப்பதும், இருந்ததும் என்னிடம் இருந்து வந்தவை. உனக்கு என்று மாறாமல்
நிரந்தரமாய் நிற்பவன் நான் ஒருவனே! மற்றவை அனைத்தும்,
கானல் நீரைப் போன்றவை. உன்னிடம் இருந்தவை எதுவும் நிரந்தரம்
இல்லை,
என்னைத் தவிர. உன்னிடம் கொடுக்கப்பட்டவை அனைத்தும்
காலத்தினைப் போல், உன் கையை விட்டு நழுவிவிடும். உன் உயிர் உட்பட. உலகத்தோடு
ஒப்பிட்டு பார்த்தால் மனித வாழ்க்கையும், மனிதனின் வாழ்நாட்களின் இன்பமும்
துன்பமும் வசந்த கால மலரைப் போன்றது. எவ்வளவு மனம் நிறைந்ததாய் இருந்தாலும் அதன்
காலம் முடிந்ததும் வாடித் தான் போக வேண்டும்.
இதை அறிந்தவன் நீ. என் நாரதனுக்கு இது தெரியாமல் இல்லை. இருந்தும் உலக
வாழ்கையும் அதன் இன்பங்களில் உள்ள மோகமும் உன்னை வசியப்படுத்திவிட்டன. என் பரம
பக்தனாகிய நாரதன் கூட என்னை மறந்துவிட்டான்! உன் சந்தோஷமும்,
உன் வாழ்க்கையும்,உன் குடும்பத்தாரின் நிம்மதியும் மட்டுமே உனக்கு உலகம்
என்றானது. உலகில் நடக்கும் மற்றவை எதுவும் உனக்கு ஒரு பொருட்டல்ல என்பது போல்
வாழ்ந்தாய். லெளதீக வாழ்வு ஒன்று மட்டுமே நிரந்தர இன்பம் தரும் என்று எண்ணினாய்.
அது ஒன்று மட்டுமே நிரந்தரம் என்று எண்ணினாய். இதுவே மாயை. இந்த எண்ணமே மாயை. உலக
வாழ்வின் உண்மையை உன் கண் முன்னால் திரையிட்டு மறைக்கும் இந்த இன்பமே மாயை. மனிதனின்
மனமானதும், அதன் தேவையும் மூவுலகிலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும். இதனாலே மாயை பற்றிய உண்மை மனிதனுக்கு எளிதில்
எட்டாக்கனி!" - அமைதியும் அன்பும் அறிவும் கலந்த நாராயணனின் வார்த்தைகளில்
உள்ள உண்மையினை உணர்ந்தார் நாரதர்.
மாயைப் பற்றிய நாரதரின் சந்தேகத்தினை தெளிவுபடுத்திய
நாராயணனும் நாரதரை உலகவாழ்வின் மாயையில் இருந்து கலைத்தார்,
உண்மை நிலைக்கு நாரதரை மாற்றினார். "என்ன நாரதா!
இப்பொழுது புரிந்ததா மனிதன் உலக வாழ்வில் உள்ள இன்பத்தில் எப்படி சிக்கியுள்ளான்
என்று. மாயை மனிதனுக்கு ஏன் எளிதில்லை என்று." - தன் மாணவன் நாரதரிடம் ஸ்ரீமன் புருஷோத்தமன் வினவ,
"புரிந்தது பிரபோ! மனித
வாழ்க்கை எளிதல்ல. மாயையும் எளிதல்ல! நன்கு உணர்ந்தேன்."- என்று நாரதரும்
பணிவுடன் பதிலளித்தார்.
"நல்லது நாரதா! மிக்க மகிழ்ச்சி. உனக்கு மாயைப் பற்றி விளக்கம் கூறியதில் சற்று
தாகமாய் உள்ளது. அந்த ஆற்றில் இருந்து ஒரு குவளை நீர்..." என்று நாராயணன்
விண்ணப்பம் போட ஆரம்பிப்பதற்குள் சுதாரித்துக்கொண்ட நாரதர் இடைமறித்து,"மீண்டும் குவளை நீரா!!!? நாராயணா! நாராயணா! போதும் எம்பெருமானே! ஒரு பாடமே போதும்.
நன்றாகவே கற்றுக்கொண்டேன். மாயைப் பற்றியும் அறிந்தேன், இனி எந்த ஒரு சந்தேகம்
வந்தாலும், உங்களிடம் வரும் முன் நானே எப்பாடு பட்டாவது விடை அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன்!
வருகிறேன் புருஷோத்தமா!"- என்றவாறு அடுத்த சந்தேகம் வரும் முன் வைகுண்டத்தின்
வாசல் நோக்கி விரைந்தார்!